rss
twitter
    Find out what I'm doing, Follow Me :)

9/25/07

வைரஸ் தடுப்பு மென்பொருளுக்கு எதிர்காலம் உள்ளதா?

கணினிகளை வைரஸ் தாக்காமல் இருக்க வைரஸ் எதிர்ப்பு அல்லது வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்கள் தினம் ஒன்று என்ற வீதத்தில் வைரசை விடவும் அதிகமாக பெருகி வருகிறது. ஆனால் வைரஸ் பரவல் கணிசமாக அதிகரித்திருக்கிறதே தவிர இந்த சாப்ட்வேர்களின் வருகையால் குறையவில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த 10- 15 ஆண்டுகளாக நம் கணினியில் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை கணினி தயாரிப்பாளர்கள் அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர். ஆனால் வைரஸ்களோ நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பல்கி பெருகி கணினிகளை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்கள் போதுமானதாக இருக்குமா, இதற்கு எதிர்காலம் இருக்கிறதா என்ற கேள்வி நிபுணர்கள் மட்டத்தில் எழுந்துள்ளது.
வைரஸ் தடுப்பு புரோகிராம்களின் கண்ணில் மண்ணைத் தூவி கணினிகளில் தற்பொது பொருத்தப்படும் நவீன புரோசசர்களை பயன்படுத்தியே நமது கணிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடும் அதி பயங்கர வைரஸ்கள் தற்போது உலா வரத் துவங்கியுள்ளன.
ஆனால் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் தயாரிப்பாளர்களோ இது ஒரு பிரச்சனையல்ல என்கின்றனர். கணினி பாதுகாப்பு முன்னணி நிறுவனமான சைமன்டெக் நிறுவனத்தின் ஆய்வுப்பிரிவு மேலாளர் எரிக் சென் இது பற்றி கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேர்கள் செத்து விட்டன என்ற பேச்சு எழுந்துகொண்டு தான் இருக்கிறது" என்றார்.
சைமன்டெக் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமான சோஃபோஸ் நிறுவனத்தின் தொழில் நுட்ப பிரிவு ஆலோசகர் கிராகாம் க்ளூலே இது குறித்து மாற்றுக் கருத்தை வைத்திருக்கிறார்.
கணினிகளை அச்சுறுத்தும் புதுபுது வைரஸ்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த வைரஸ் புரோகிராம்கள் ஒரு கணினியை அடையும் விதம் மிகவும் பழைய முறையாகவே இன்னமும் உள்ளது. இதனால் அதனை கண்டுபிடித்து அழித்து விட முடிகிறது என்கிறார்.
தற்போது உள்ள வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேர்கள் அதே பெயரில் இருக்கலாம் ஆனால் அது 20 ஆண்டுகளுக்கு முன்பு செய்த வேலையை செய்வதில்லை. வைரஸ் அடையாளங்களின் (Virus Signatures) சுவடை தற்போது உள்ள வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேர்கள் நம்பியிருக்கவில்லை. அதாவது எந்த ஒரு வைரஸிலும் அதற்கென்றே பிரத்யேகமான அடையாளம் ஒன்று இருக்கும். அதனை கண்டுபிடித்து அழிக்கும் முறையை தற்போது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள் கடைபிடிப்பதில்லை என்கிறார் சைமன்டெக் ஆய்வுப் பிரிவு தலைவர்.

ஓராண்டிற்கு முன்னர் ரூட்கிட்ஸ் (Rootkits) என்று அழைக்கப்படும் தன்னை மறைத்துக் கொண்டு நம் கணினிகளை அதன் கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் வைரஸ் புரோகிராம்களை வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் கண்டுபிடிக்க திணறியது. ஆனால் தற்போது உள்ள அனைத்து வைரஸ் தடுப்பு தயாரிப்புகளுமே இத்தகைய வைரஸ்களை அழித்து விடும் திறனுடையதாக உள்ளது என்று சோஃபோஸ் நிறுவன தொழில்நுட்ப ஆலோசகர் தெரிவித்தார்.சொந்த கணினிகளாயினும், நிறுவனங்களில் உள்ள நெட்வொர்க் பயன்பாட்டு கணினிகளாகட்டும் இரண்டுமே வைரஸ் பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாகவே செயல்படுவதாக ஸ்பெயினை சேர்ந்த கணினி பாதுகாப்பு நிறுவனமான் பாண்டா செக்யூரிட்டி ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.குறிப்பாக கார்ப்பரேட் நெட்வொர்க்குகள் 72 சதவீதம் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.தற்போது இ-மெயில் மூலம் பரவும் வைரஸ்களை விட, வைரஸ் தாக்கிய ஒரு இணையதளத்திற்கு நாம் செல்லும்போது அதிலிருந்து தானாகவே நம் கணினிக்குள் வைரஸ்கள் புகுந்து விடுவதுதான் அதிகமாக ஏற்படுகிறது. நாளொன்றுக்கு வைரஸ் தாக்கிய ஒரு 29,000 இணையப்பக்கங்களை பார்த்து வருவதாக சோஃபோஸ் நிறுவனம கூறுகிறது.
ஸ்பெயினைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் கூறும் இன்னொரு தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 7- 8 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் முதல் 3 லட்சம் கணினி வைரஸ்கள்தான் இருந்தன. இப்போது அது மேலும் பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 90 சதவீத வைரஸ்கள் தங்களது அடையாளங்களை மாற்றியவண்ணம் உள்ளன. இதனால் கண்டுபிடிப்பது ஏறக்குறைய முடியாத காரியமாகிவிடுகிறது என்று அச்சுறுத்துகிறது இந்த ஆய்வு நிறுவனம்.இன்றைய அதி தீவிர கணினி வைரஸ்கள் கொடுக்கும் மற்றொரு அதிர்ச்சி என்னவெனில் நம் கணினியில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து செயல்பட்டு வரும் வைரஸ் எத்தனை நாட்களுக்கு இருக்கிறதோ அது திருட்டு வேலைகளை செய்யத் துவங்கிவிடும். கடன் அட்டை விவரங்கள், நம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடுதல் போன்ற கிரிமினல் நடவடிக்கைகள் நமக்கு தெரியாமலேயே நடைபெறும்.நியுசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, "நல்ல திறன் படைத்த வைரஸ் புரோகிராம்களை உருவாக்கும் ஒரு நிபுணர் ஆண்டொன்றிற்கு 2 லட்சம் டாலர்கள் வருவாய் ஈட்டுகிறார்" என்றார்.கொலம்பிய பல்கலைக் கழக கணினி விஞ்ஞான பேராசிரியர் கூறுகையில், "என்னதான் மண்டையைப் பிய்த்துக் கொண்டு கணினி நிபுணர்கள் வைரசுடன் தங்களது போரைத் துவங்கினாலும், வைரஸ் புரோகிராமர்களுக்கு ஏகப்பட்ட நேரம் உள்ளது. அவர்கள் வைரஸ்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு புரோகிராம்களை தயாரிப்பதில் அதிக ஊக்கம் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு இதற்கான சக்தி இருக்கிறது" என்று கூறினார்.உலகமயமாக்கலில் கண்னி மயமாதல் அசுர வளர்ச்சி பெற்றுவரும் இன்றைய யுகத்தில் அதற்கு எதிர் முரணாக இதுபோன்ற கிரிமினல் சக்திகளும் வளர்ந்து வருவதை தடுக்க பல்வேறு விதத்தில் ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கிறது.

No comments: