உங்கள் முகத்தை அடையாளம் கண்டு உங்கள் பெயரை தெரிந்து கொண்டு உங்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் சிறிய ரோபோவை டெக்சாசில் உள்ள ரோபோ தயாரிப்பு நிறுவனமான ஹேன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புரோகிராமர்கள் ஆகியோர் கடுமையாக உழைத்து தயாரித்துள்ளனர்.
இந்த ரோபோவிற்கு பேசவோ, நடக்கவோ தெரியாது. ஆனால் கண் சிமிட்டல் உள்ளிட்ட பல்வேறு வெளிப்பாடுகள் மூலம் நம்முடன் இந்த ரோபோ தொடர்புகொள்ளுமாம். 17 அங்குலம் உயரம் மற்றும் 6 பவுண்ட் எடையுள்ள இந்த செயற்கை ஜினோ 5 ஆண்டுகால உழைப்பினால் விளைந்த கண்டுபிடிப்பாகும்.
நம் கூடவே ஒட்டி உறவாடி வாழ முடிந்த இத்தகைய ரோபோக்களுக்கு தேவை அதிகமிருப்பதாக டேவிட் ஹேன்சன் கூறுகிறார்.
தற்போது உருவாக்கிய இந்த ரோபோச்சிறுவனை (ஆம்!அப்படித்தான் அழைக்கிறார்கள்!) லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒயர்டு நெக்ஸ்ட்ஃபெஸ்ட் டெக்னாலஜி மாநாட்டில் மாணவர்களுக்கு காட்சிப் பொருளாக்க உள்ளார்கள்.
நிறைய ரோபோ பொம்மைகள் பல்வேறு தொழில்நுட்ப உள்ளடக்கத்துடன் இருந்தாலும், இந்த ரோபோச்சிறுவன் ஜினோ உங்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ளும் திறனும், உங்களுடன் உரையாடும் திறனும் ஏன் தனது முகத்தில் சில அசைவுகளைச் செய்து தன் உணர்வையும் வெளிப்படுத்தும் திறனும் உடையது என்கிறார் டேவிட் ஹேன்சன்.
இது ஏதோ விஞ்ஞானப் புனை கதை போல் தோன்றுகிறது இல்லையா? ப்ரெய்ன் ஆல்டிஸ் என்பவரின் "சூப்பர் டாய்ஸ் லாஸ்ட் ஆல் சம்மர் லாங்" என்ற நூலைப் படித்த டேவிட் ஹேன்சன், அதனால் தூண்டப்பட்டே இத்தகைய ரோபோவை வடிவமைப்பதில் தீவிரம் காட்டியதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment