செல்போன் மற்றும் மொபைல் பயன்பாட்டிற்கான அதிவேக ஒரு ஜிகாபைட் மெமரி சிப்-ஐ தயாரித்திருப்பதாக தென் கொரியாவின் ஹைனிக்ஸ் செமிகண்டக்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் 2-வது மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹைனிக்ஸின் இந்த சிப் ஆனது, விநாடிக்கும் சுமார் 800 மெகாபைட் டேட்டாக்களை திரட்டும் என்றும், தற்போது சந்தையில் கிடைக்கும் சிப்களை விட புதிய சிப் டேட்டாவை பெறும் திறன் அதிவேகமானது என்றும் அந்நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
மொபைல் பயன்பாடுகளின் விரிவான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த சிப் இருக்கும் என்றும், வேகமான செயல்பாட்டு திறனுக்காகவும், அதிவேக மெமரிக்காகவும் இது பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சிப்களை அதிகளவில் ஹைனிக்ஸ் தயாரிக்கும் என்றும், நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இவை விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.