தொலைக்காட்சி மற்றும் சினிமா பொருளடக்க தயாரிப்பு நிறுவனமான யூடிவி சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணை நிறுவனமான வி அன்ட் எஸ் புராட்காஸ்டிங் வரும் டிசம்பர் மாதத்தில் உலக சினிமாக்களுக்கான தொலைக்காட்சி சேனல் ஒன்றை துவக்குகிறது.
அண்மையில் வி அன்ட் எஸ் நிறுவனம் இளைஞர்களுக்கான பிந்தாஸ் மற்றும் பிந்தாஸ் மூவீஸ் என்ற இரண்டு சேனல்களை அறிமுகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேர சேனலான இது, உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் சிறந்த படங்களை நமக்கு வழங்கவுள்ளது. இந்த படங்கள் ஒளிபரப்பப்படும் போது, அவற்றின் மொழிபெயர்ப்புக்குரிய ஆங்கில துணைத் தலைப்புகளும் வந்தபடியிருக்கும்.
தற்போது நமக்கு ஸ்டார் மூவீஸ், ஸீ கஃபே, ஏ.எக்ஸ்.என். மற்றும் ஹெச்.பி.ஓ ஆகிய பிரபல சேனல்கள் கிடைக்கின்றன. இந்த சேனல்கள் ஆண்டொன்றிற்கு ரூ.170- 180 கோடி விளம்பர வருவாய் ஈட்டி வருகின்றன.
இந்த சேனல் அறிமுகத்தின் தேவை குறித்து பேசிய வி அன்ட் எஸ் நிறுவன தலைமை அதிகாரி ஷாந்தனு ஆதித்யா, 20 மில்லியன் கேபிள் இணைப்புகளுக்கு உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களை வழங்கும் நோக்கத்துடன் இது துவங்கப்படுகிறது என்றார்.
இதுவரை உள்ள ஸ்டார் மூவீஸ் மற்றும் ஹெச்.பி.ஓ உள்ளிட்ட சேனல்களில் வெகு ஜன திரைப்படங்கள் ஒளிபரப்பபடுகின்றன. ஆனால் சிறந்த உலக சினிமாவுக்கென்று தனிப்பட்ட சேனல்கள் இல்லையென்பதால் ஒரு குறிப்பிட்ட உயர்மட்ட, மத்தியதர, உயர் மத்தியதர வகுப்பினரிடையே இந்த சேனல் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.இப்படங்களை தற்போது விசிடி லைப்ரரி அல்லது டிவிடி லைப்ரரிகளிலிருந்து எடுத்து பார்க்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. இது மிகவும் சிக்கனமானது. எனினும் நமக்கு பிடித்த திரைப்படங்கள் தவிர, வேறு சிறந்த படங்கள் என்னவென்று தெரியாத நேயர்களுக்கு சேனலே தேர்ந்தெடுத்து காண்பிப்பதால் இதற்கு வரவேற்பு அதிகரிக்கும். உதாரணமாக லத்தீன் அமெரிக்க நாட்டு கலைப்படங்கள் அவ்வளவாக இந்தியாவில் கிடைப்பதில்லை. அதுபோன்ற அரிதான உலக திரைப்படங்கள் நம் வீட்டிற்கு வருவது என்பது வரவேற்கத்தக்கதே என்று நேயர்கள் கருதக்கூடும். எனினும் இந்த சேனல் மக்களிடையே எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய ஒரு மாதம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி விளம்பர நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. கட்டணச் சேனலான இது டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை போன்ற டீ.டி.எச் சேவைகளுக்கும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் வரும் மார்ச் மாதத்தில் வி அன்ட் எஸ் புராட்காஸ்டிங் ஹிந்தி திரைப்பட சேனல், ஆங்கில வணிக செய்திகள் சேனல் மற்றும் ஹிந்தி பல்சுவை பொழுதுபோக்கு சேனல் ஒன்றையும் துவங்குகிறது.